அஞ்செட்டியில் தொட்டஹள்ளா நீர்த்தேக்கம் கட்டப்படுமா?


அஞ்செட்டியில் தொட்டஹள்ளா நீர்த்தேக்கம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 6 Oct 2022 7:30 PM GMT (Updated: 6 Oct 2022 7:31 PM GMT)

மழைக்காலங்களில் வீணாக காவிரி ஆற்றில் கலக்கும் மழை நீரை தடுத்து அஞ்செட்டி பகுதியில் தொட்டஹள்ளா நீர் தேக்கத்தை கட்ட வேண்டும் என அஞ்செட்டி சுற்று வட்டார பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

மழைக்காலங்களில் வீணாக காவிரி ஆற்றில் கலக்கும் மழை நீரை தடுத்து அஞ்செட்டி பகுதியில் தொட்டஹள்ளா நீர் தேக்கத்தை கட்ட வேண்டும் என அஞ்செட்டி சுற்று வட்டார பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலை சூழ்ந்த பகுதி

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும், வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் அஞ்செட்டியை சுற்றிலும் மலை கிராமங்கள் அதிகமாக உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியாக விளங்க கூடிய அஞ்செட்டியில் பல தரப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். சுற்றிலும் வனப்பகுதி உள்ள இந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக தொட்டஹள்ளா ஆறு வழியாக நீண்ட தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தில் பெய்யும் மழைநீர் அஞ்செட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு பயன்படாமலே ஒவ்வொரு ஆண்டும் வீணாகி வருகிறது.

வேலைவாய்ப்பு பெருகும்

இந்த நிலையில் மழைக்காலங்களில் வீணாகும் தொட்டஹள்ளா ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி விவசாயம், குடிநீர், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். அஞ்செட்டி பகுதியில் தொட்டஹள்ளா நீர்த்தேக்கம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்,

அஞ்செட்டி பகுதியில் மழைக்காலங்களில் வீணாக செல்லும் நீரை தடுத்து தொட்டஹள்ளா அணை கட்டினால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று விவசாயம் செழிக்கும், விவசாய வேலை வாய்ப்பு பெருகும். மேலும் அஞ்செட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மலை கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் ஏதுவாக இருக்கும்.

கால்நடை வளர்ப்பு அதிகரிக்கும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு அஞ்செட்டி பகுதியில் தொட்டஹள்ளா அணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

குடிநீர் பிரச்சினை

இது குறித்து அஞ்செட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம்:- அஞ்செட்டி பகுதியில் தொட்டஹள்ளா அணையை கட்டினால் மழை காலங்களில் வீணாகும் மழைநீர் சேமிக்கப்பட்டு விவசாயம் பெருகும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு அதிகமாகும். மேலும் வனவிலங்குகளுக்கும் இந்தநீர் பயனுள்ளதாக இருக்கும் எனவே இப்பகுதி பொதுமக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

அந்த பகுதியை சேர்ந்த மகேஸ்வரி:- அஞ்செட்டி மற்றும் அதனை சுற்றி மலைகளும், மலை கிராமங்களும் ஏராளமாக உள்ளது. அவ்வப்போது மலை கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்த பகுதியில் வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. தொட்டஹள்ளா அணை கட்டப்பட்டால் விவசாயத் தொழில் பெருகும், விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கிராம மக்களின் வாழ்வாதாரம் பெருகும். மேலும் வேலைக்காக இங்குள்ள மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் நிலையும் குறையும். எனவே தமிழக அரசு அஞ்செட்டியில் தொட்டஹள்ளா அணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story