தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக மாற்றப்படுமா?
டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சுகாதார நிலையம்
கரூர் மாவட்டம், தோகைமலையில் 30 படுக்கை வசதிகளுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தோகைமலை, கழுகூர், சின்னயம்பாளையம், நாகனூர், கீழவெளியூர், பாதிரிப்பட்டி, பில்லூர், பொருந்தலூர், புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் 8 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
இ்ங்கு கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கும் வசதி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே ஆகிய வசதிகள் மட்டுமே உள்ளது. இதனால் பெரிய விபத்துகள் ஏதாவது ஏற்பட்டால் முதலுதவிக்கு பின்னர் திருச்சி, மணப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீணான அலைச்சலும், நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-
கர்ப்பிணிகள் அவதி
தெலுங்குபட்டியை சேர்ந்த சுப்பிரமணி:-
இந்த சுகாதார நிலையத்திற்கு மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது ஏதாவது பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அதனை செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சி, குளித்தலை, கரூர், மணப்பாறை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சென்றால் இவர்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் முன்கூட்டியே இருக்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
உயர்தர சிகிச்சைக்கு உபகரணங்கள் இல்லை
வடசேரியை சேர்ந்த சக்தி:-
தோகைமலை பகுதியில் தினமும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில் படுகாயம் அடைபவர்களை தோகைமலை சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரும்போது, முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்க முடிகிறது. டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்க உபகரணங்கள் இல்லை. இதனால் தொலைதூரத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விடுகின்றனர். இதனால் சுகாதார நிலையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்க உபகரணங்கள் வழங்க வேண்டும்.
தரம் உயர்த்த வேண்டும்
தோகைமலையை சேர்ந்த அலாவுதீன்:-
சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. தோகைமலையில் பின்தங்கிய பொதுமக்களே அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் ஒரே மருத்துவமனை இந்த சுகாதார நிலையம் தான். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏதாவது சிறிய நோய் ஏற்பட்டாலும் இந்த சுகாதார நிலையத்தை நாடி வருகிறோம்.
தனியார் மருத்துவமனைக்கு செல்ல பொருளாதார வசதி இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் தினமும் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வருகிறோம். இதனால் தோகைமலையை மையமாக வைத்து பொதுமக்கள் நலன்கருதி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பலமுறை மனு வழங்கினோம்
தோகைமலையை சேர்ந்த ரமேஷ்:-
தோகைமலை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என நாங்கள் கடந்த 2005-ம் ஆண்டு முதல் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினோம். பலகட்ட போராட்டங்களை நடத்தியும், எடுத்து சொல்லியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும், மேலும், அதிகப்படியான டாக்டர்களை பணி அமர்த்தி, மருத்துவ உபகரணங்களை வழங்கியும், சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தேவையான கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எங்கள் பகுதி மக்களின் சார்பாகவும் இந்த கருத்தினை தெரிவிக்கின்றேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.