கரூர் புதுத்தெரு சாலையில் போக்குவரத்து மாற்றப்படுமா?


கரூர் புதுத்தெரு சாலையில் போக்குவரத்து மாற்றப்படுமா?
x

போக்குவரத்து நெரிசலை குறைக்க கரூர் புதுத்தெரு சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கரூர்

புதுத்தெரு சாலை

கரூரில் இருந்து வாங்கல், சோமூர், திருமுக்கூடலூர், நெரூர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் கரூரில் இருந்து சர்ச் கார்னர், புதுத்தெரு சாலை, காமராஜ் மார்க்கெட் வழியாக சென்று ஐந்துரோடு பகுதியில் பிரிந்து செல்கின்றன. இதேபோல் வாங்கல், சோமூர், நெரூர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஐந்துரோடு, காமராஜ் மார்க்கெட், புதுத்தெரு, சர்ச் கார்னர் வழியாக வந்து கரூரை வந்தடைகின்றன.

இதில் கரூரில் இருந்து செல்லும் வாகனங்கள் சர்ச் கார்னரில் இருந்து புதுத்தெரு வழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் புதுத்தெரு சாலை மிக குறுகிய சாலையாக உள்ளது. இதனால் இந்த புதுத்தெரு சாலை வழியாக வாகனங்கள் சென்று வரும் போது அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சோமூர், நெரூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் புதுத்தெரு வழியாக சென்று வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு

எதிர்திசைகளில் 2 பஸ்கள் கடந்து செல்லும் வகையில் புதுத்தெரு சாலை இல்லாததால் பஸ்கள் அந்த சாலையை கடக்கும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். அதிலும் குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்களும் இந்த புதுத்தெரு சாலை வழியாக செல்லும்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அந்த சமயங்களில் பஸ்கள் வரும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நேரம் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் மாலை நேரங்களிலும் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இந்த நிலைமைைய சீர்செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோரிக்கை

இந்த புதுத்தெரு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல், பஸ் போக்குவரத்தினை மாற்றியமைக்க வேண்டும் எனவும், மாற்றுவழியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து வாங்கல், சோமூர், நெரூர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சர்ச் கார்னரில் இருந்து புதுத்தெரு வழியாக செல்லாமல், ரெத்தினம் சாலை, கரூர் ரெயில் நிலையம், காமராஜ் மார்க்கெட் வழியாக ஐந்துரோடு பகுதிக்கு சென்று விடலாம்.

இந்த வழியாக பஸ்கள் செல்லும் போது குறுகிய சாலையாக உள்ள புதுத்தெரு சாலையில் போக்குவரத்து பாதிப்பு குறையும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சோமூர், நெரூர், திருமுக்கூடலூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூருக்கு வரும் பஸ்கள் வழக்கம் போல் புதுத்தெரு சாலை வழியாக செல்லலாம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போக்குவரத்து நெரிசல் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

வாகனங்களை நிறுத்த முடியவில்லை

ராஜா:- கரூர் புதுத்தெரு வழியாக பஸ்கள் வந்து செல்லும் போது அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். மேலும் அப்பகுதியில் அதிகமான கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கூட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம்கூட பாதிக்கிறது. வாகனங்கள் கூட நிறுத்த முடியாத அளவிற்கு இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. எனவே புதுத்தெரு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பஸ்கள் செல்லும் பாதைக்கு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் தினமும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும்.

வாகனங்கள் அதிகரிப்பால் பாதிப்பு

மகேஸ்வரன்:- புதுத்தெரு சாலை குறுகிய சாலையாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. காலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அப்போது இச்சாலையில் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் எதிர், எதிர் திசைகளில் வரும் போது செல்ல வழியில்லாமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கூட போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

அப்போது நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இச்சாலையில் இவ்வளவு போக்குவரத்து பாதிப்பு இருக்காது. தற்போது மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாகனங்கள் அதிகரிப்பின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது உள்ள வாகன அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் போக்குவரத்தினை மாற்றியமைக்க வேண்டும்.

போக்குவரத்து மாற்றப்படுகிறது

சண்முகம்:- காமராஜ் மார்க்கெட்டில் இருந்து புதுத்தெரு வரையிலான சாலை குறுகியதாக உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக தான் இருக்கிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும்போது கரூர் ரெயில் நிலையம் வழியாக பஸ் போக்குவரத்தினை மாற்றிவிடுவார்கள். மற்ற நேரங்களில் புதுத்தெரு சாலை வழியாகதான் பஸ்கள் செல்கின்றன. இரண்டு பஸ்கள் எதிர், எதிர்திசையில் செல்லும் போது கண்டிப்பாக இச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

இதனால் கரூரில் இருந்து செல்லும் பஸ்கள் வாகனங்களை ரெத்தினம் சாலை, கரூர் ரெயில் நிலையம், காமராஜ் மார்க்கெட் வழியாக ஒருபாதையாகவும், காமராஜ் மார்க்கெட், புதுத்தெரு, சர்ச் கார்னர் வழியாக ஒரு பாதையாகவும் மாற்றியமைத்தால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story