நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா புத்துயிர் பெறுமா?
நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா புத்துயிர் பெறுமா?
ஓய்வின்றி உழைப்பு, குடும்ப சுமை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க மக்கள் பொழுதுபோக்கு அம்சத்தை நாடுவது வழக்கம். அது அவர்களுக்கு மன நிம்மதியை தரும் வகையில் இருக்கும். இதில் பட்டி தொட்டி முதல் நகரம் வரை பூங்கா முக்கிய இடத்தை பெற்றிருக்கும்.
ஆனால் இத்தகைய பூங்காவை சரிவர பராமரிக்காமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதில் நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவும் ஒன்று. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள இந்த பூங்கா தான் இங்குள்ள மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது.
போர் விமானம்
இந்த பூங்காவின் நுழைவு வாயிலில் அனைவரையும் வரவேற்கும் விதமாக டைனோசர் சிலை உள்ளது. எண்ணற்ற மரங்களும், பூச்செடிகளும் பூங்காவை அழகுபடுத்துகின்றன. விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, செல்பி பாயின்ட் உள்ளிட்டவை பூங்காவில் உள்ளன. அதோடு இந்திய ராணுவத்தில் பயிற்சி விமானமாக இருந்த மிக்-21 போர் விமானமும் பூங்காவை அலங்கரிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட இருக்கைகளும் இங்கு உள்ளன. வேப்பமூடு பூங்காவில் காலையிலும், மாலையிலும் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் பூங்காவில் திரளுவார்கள்.
அப்படி வரும் பொதுமக்களிடம் ஒரு நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவே சிறுவர்களுக்கு ரூ.5 வசூலிக்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் நிறுத்த ரூ.20-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக வாங்கப்படுகிறது. ஆனால் ஒட்டு மொத்த மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழும் வேப்பமூடு பூங்காவின் நிலையோ பரிதாபமாகவே உள்ளது.
அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் மிகவும் மோசமாக உள்ளது. பழைய உபகரணங்கள் என்பதால் ஊஞ்சலில் துருப்பிடித்து ஆடும்போது கீச்...கீச்... என்று சத்தம் வருகிறது. இதனால் கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்துடன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
இதுபற்றி பூங்காவுக்கு வந்த குளச்சலை சேர்ந்த ஆஷித் என்பவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
கேண்டீன் தேவை
வேப்பமூடு பூங்கா எனக்கு மிகவும் பிடிக்கும். நான் குளச்சலில் இருந்து மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கு வந்திருக்கிறேன். பூங்காவை பற்றி சொல்ல வேண்டுமாயின் புதிதாக எதுவும் இல்லை. விளையாட்டு உபகரணங்கள் சில இடங்களில் உடைந்து கிடக்கிறது. பூங்காவில் அழகான நீருற்று இருந்தது. அது இப்போது செயல்படவில்லை. சேதம் அடைந்து காட்சி பொருளாக இருக்கிறது. அதுமட்டும் இன்றி பூங்காவில் தண்ணீர் வசதி கூட சரியாக இல்லை. வீட்டில் இருந்தே தண்ணீர் பாட்டிலில் அடைத்து கொண்டு வர வேண்டி உள்ளது. குழந்தைகள் திடீரென ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு கேட்கும் போது பூங்காவை விட்டு வெளியே சென்று வாங்கி வரவேண்டி இருக்கிறது. இதனால் பூங்காவில் முழுமையாக இருக்க முடிவது இல்லை. எனவே பூங்காவில் சிறிய அளவிலான கேண்டீன் அமைத்தால் நன்றாக இருக்கும். மேலும் விளையாட்டு உபகரணங்கள் குறைவாகவே உள்ளது. ஏராளமான மக்கள் குழந்தைகளை அழைத்து வரும் போது அதற்கு ஏற்றார் போல உபகரணங்கள் இல்லை. எனவே கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேம்படுத்த வேண்டும்
சுசீந்திரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ராம்பரத் கூறியதாவது:- விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் வந்து பூங்காவுக்கு வந்து பாடங்களை படிப்போம். சில சமயங்களில் அங்கு விளையாடி பொழுதையும் கழிப்போம். ஆனால் மற்ற மாவட்டங்களில் உள்ள பூங்காக்களை பார்க்கும் போது வேப்பமூடு பூங்கா சற்று பழமையானதாக தெரிகிறது.
இங்குள்ள செடிகளுக்கு ஒழுங்காக தண்ணீர் ஊற்றுகிறார்களா? என்று தொியவில்லை. ஏன் எனில் செடிகள் வாடி போய் உள்ளன. மின் விளக்கு ஒன்று உடைந்து தொங்கி கொண்டு இருக்கிறது. கருகிய மரம் ஒன்றும் உள்ளது. அவற்றை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அதோடு பூங்காவை இன்னும் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்துமீறும் காதல் ஜோடிகள்
மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேப்பமூடு பூங்காவுக்கு காதல் ஜோடிகளும் அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து கொண்டு ஒருவர் மடியில் மற்றொருவர் படுப்பதும், சில நேரங்களில் சில்மிஷம் செய்வதும் என இருக்கிறார்கள். யாரையும் கண்டு கொள்ளலாம் காதல் ஜோடிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குடும்பமாக வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே காதல் ஜோடிகளின் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
--------------