கட்சியை செயல்படாத நிலைக்கு தள்ளிவிட்டு எனக்கு கடிதம் எழுதுவதா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம்


கட்சியை செயல்படாத நிலைக்கு தள்ளிவிட்டு எனக்கு கடிதம் எழுதுவதா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

கட்சியை செயல்படாத நிலைக்கு தள்ளிவிட்டு எனக்கு கடிதம் எழுதுவதா என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் ஜூலை 9-ந்தேதி நடக்கிறது. இந்தநிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், 'உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சியின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு நான் கையெழுத்திட தயார். நீங்களும் கையெழுத்திட்டு அந்த படிவத்தை என்னிடம் அனுப்பவேண்டும். இருவரும் கையெழுத்திட்டு கொடுக்கும் படிவத்தை ஏற்று இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கொடுக்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது', என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக தகவல்களும் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி கடிதம்

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி நேற்று பதில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

கடந்த 29-ந்தேதியிட்ட உங்களது கடிதம் பத்திரிகை மூலமாக தெரிந்துகொண்டேன். பின்னர் இந்த கடிதம் மகாலிங்கம் (அ.தி.மு.க. கட்சி அலுவலக மேலாளர்) வழியாகவும் பெறப்பட்டது.

கடந்த 23-ந்தேதி நடந்த கட்சி பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடந்த கட்சி செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கட்சியின் சட்டதிட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, அந்த சட்டதிட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கது அல்ல.

கூட்டத்தை புறக்கணித்த நிலையில்...

மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் கடந்த 27-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கட்சியின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், அன்றைய தினம் கூட்டப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு நீங்கள் உள்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். நீங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய உங்களது கடிதம் ஏற்புடையதாக இல்லை.

கட்சியை செயல்பட விடாமல்...

அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கட்சியின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக நீங்கள் ஆவடி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் புகார் அளித்தும், நீதிமன்றங்கள் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தும், அ.தி.மு.க.வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

'ஒருங்கிணைப்பாளரே கிடையாது'

தற்போதைய இந்த கடிதத்தில் 'ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே கிடையாது' என்று எடப்பாடி பழனிசாமி சூசகமாக அறிவித்து விட்டார். மேலும் தனது ஆதங்கத்தையும் மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த கடிதம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story