தேசிய ஊரக திறனாய்வு தேர்வில்தர்மபுரி மாவட்டத்தில் 298 மாணவ, மாணவிகள் வெற்றிமாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தனர்

கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய ஊரக திறனாய்வு தேர்வில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 298 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தனர்.
திறனாய்வு தேர்வு
8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேசிய ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான தேசிய ஊரக திறனாய்வு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இந்தத் தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் 6,300 மாணவ மாணவிகள் எழுதினார்கள். இந்தத் தேர்வை சிறப்பாக எழுத தயார்படுத்தும் வகையில் கல்வித்துறை சார்பில் 23 மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
298 பேர் வெற்றி
இந்த நிலையில் தேசிய ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியானது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 298 மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் அதிக அளவில் வெற்றி பெற்று கல்வி ஊக்கத்தொகையை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டு தெரிவித்தார். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும்போது அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.






