கன்னியாகுமரி கடற்கரையில் காற்றாடி திருவிழா
சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக கன்னியாகுமரியில் காற்றாடி திருவிழா 4-ந் தேதி தொடங்க இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக கன்னியாகுமரியில் காற்றாடி திருவிழா 4-ந் தேதி தொடங்க இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுயவேலை வாய்ப்புகள்
இந்திய திருநாட்டின் தெற்கு எல்லையில் வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் முனையில் கன்னியாகுமரி அமைந்துள்ளது. இந்தியாவின் சிறப்புமிகு சுற்றுலா தலங்களுள் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும், அதிக கடற்கரை சுற்றுலாத்தலங்களை கொண்ட இடமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது.
குமரி மாவட்டத்திற்கு கடந்த 2021-ம் ஆண்டு 38 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2022-ம் ஆண்டு 1 கோடியே 64 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் சுமார் 55 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 441 சுற்றுலா பயணிகளும், மாவட்டம் முழுமைக்கும் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகளும் வந்திருக்கிறார்கள்.
இதனால் அதிகப்படியான சுயவேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூரிய அஸ்தமன பகுதியினை மேம்படுத்தும் வகையில் மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
காற்றாடி திருவிழா
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதல்முறையாக காற்றாடி திருவிழா 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் (முதல் நாள் கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பகுதி, மற்ற 2 நாட்கள் சங்குத்துறை கடற்கரையிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை) தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் இணைந்து நடத்தப்பட உள்ளது. திருவிழாவில் தனி நபர்கள் காற்றாடி பறக்க விடுவதற்கு அனுமதி இல்லை. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வட மாநிலங்களில் இருந்து காற்றாடி இயக்குபவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட வண்ணமயமான பல்வேறு வடிவங்களில் காற்றாடி பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.