சூறைக்காற்றால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன
சூறைக்காற்றால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன.
உப்பிலியபுரம்:
சூறைக்காற்று
உப்பிலியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தும் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. இதில் பி.மேட்டூர் பகுதியில் உயரழுத்த மின்கம்பம் உடைந்து விழுந்ததையடுத்து, மின்வாரிய ஊழியர்களின் அவசர கால சீரிய பணிகளால் நேற்று மின் வினியோகம் சீரடைந்தது.
இதில் தங்க நகர் பகுதியில் சரவணன் என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒக்கரையை சேர்ந்த சின்னசாமி என்பவரது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களில் சுமார் 800 மரங்கள் முறிந்து சாய்ந்தன.
ஆய்வு
இது பற்றி ஒக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தோட்டங்களில் இருந்த வேம்பு, பூவரசு, முருங்கை முதலான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், தோட்டங்களிலிருந்த மாட்டுக் கொட்டகைகள் சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.