காளியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா


காளியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா
x

பழைய ஆதனக்கோட்டையில் காளியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டை மலையடி குளக்கரையில் அமைந்துள்ள காளியம்மன், பிடாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் தாங்கள் வேண்டிய வரம் கிடைக்க நேர்த்திக்கடனாக ஒரு குடத்தில் சர்க்கரை அல்லது தயிர் போட்டு தென்னம்பாளையை குடத்தில் சொருகி பாளையின் மேல் பூ சுற்றி மேலே பச்சைக்கிளி போன்ற பொம்மைகள் வைத்து தயார் செய்யப்பட்ட மதுக்குடத்தினை பக்தர்கள் எடுத்துக்கொண்டு பழைய ஆதனக்கோட்டை முருகன் கோவிலில் இருந்து முளைப்பாரியினை தலையில் வைத்து தாரை தப்பட்டை முழங்க 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மது எடுத்து வந்தனர்.

பக்தர்கள் கொண்டுவந்த மது குடத்தில் சர்க்கரை குடத்தை காளியம்மனுக்கும், தயிர் குடத்தை பிடாரியம்மனுக்கும் ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின்னர் கோவில் பிரகாரத்தில் பொங்கல் வைத்து கோவில் முன்பு கிடாய்வெட்டி கிடாயின் ரத்தத்தை பொங்கலிட்டனர். பின்னர் பொங்கல் சோற்றினை கொண்டு பில்லிசோறு எறிந்து மது திருவிழாவினை கொண்டாடினர். இந்த விழாவில் ஆதனக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான பழையஆதனக்கோட்டை, சோத்துப்பாழை, வளவம்பட்டி சொக்கநாதப்பட்டி, சோழகம்பட்டி, குப்பையன்பட்டி, வண்ணாரப்பட்டி, மடத்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story