அரசு நிலங்களை மீட்டு கம்பி வேலி அமைப்பு


அரசு நிலங்களை மீட்டு கம்பி வேலி அமைப்பு
x
தினத்தந்தி 15 May 2023 5:45 AM IST (Updated: 15 May 2023 5:45 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சப்-கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சப்-கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புறம்போக்கு நிலங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு இடத்தை சம்பந்தப்பட்ட நபர்களை காலி செய்து விட்டு, ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி கம்பி வேலி அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, கிணத்துக்கடவு பகுதியில் 2 இடங்களில் அரசு நிலம் மீட்கப்பட்டு, சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த இடங்களை பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை பார்வையிட்டார். பின்னர் வருவாய் துறையில் உள்ள புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் கோபிலதா, கிராம நிர்வாக அலுவலர் விமல்மாதவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நோட்டீஸ்

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவின்படி, புறம்போக்கு நிலங்களில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் நபர்களை கண்டறிந்து, அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தவும், அந்த நிலத்தை மீட்டு கம்பி வேலி அமைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது கிணத்துக்கடவில் 2 இடங்கள் மீட்கப்பட்டது.

மேலும் கிணத்துக்கடவில் அரசு இடத்தில் உள்ள காய்கறி கடைகளை காலி செய்துவிட்டு, அந்த பகுதியில் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக அந்த பகுதியில் காய்கறி கடை வைத்திருக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, காலி செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. காய்கறி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டவுடன் அந்த பகுதியில் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story