பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்த மாணவர்களுக்கு பாராட்டு
பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்ததற்காக விருதுபெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சின்னாளப்பட்டி 'பசுமை வாசல் பவுண்டேசன்' சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளியில் மரக்கன்று நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு வெண்புறா பசுமை சுடர் விருது வழங்கப்பட்டது. அதன்படி, மரக்கன்றுகள் நட்டு பராமரித்த பழனி நகராட்சி கடைவீதி நடுநிலைப்பள்ளி மாணவர்களான ஆரோக்கிய வினோத், கவுதம்பாண்டி, ஹரீஷ், முகமதுஅனஸ், முகமதுரியாஸ், மலையப்பன், அருள்குமரன் ஆகியோருக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களை ஒருங்கிணைத்து வரும் ஆசிரியர் கோகிலவாணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செந்தில்வடிவு முன்னிலை வகித்தார். பின்னர் விருது பெற்ற மாணவர்கள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியையை கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.