குளு,குளு வசதி கொண்ட பெட்டிகளுடன்மின்இழுவை ரெயில் சோதனை ஓட்டம்
பழனி முருகன் கோவிலில் குளு, குளு வசதி கொண்ட பெட்டிகள் பொருத்தப்பட்டு மின்இழுவை ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நவீன பெட்டிகள்
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து விரைவாக செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற 3 மின்இழுவை ரெயில்கள் அடிவாரம் மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இதன்மூலம் தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பழனி மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு குளிர்சாதன வசதி, டி.வி. என நவீன வசதிகளுடன் கூடிய 2 மின்இழுவை ரெயில்பெட்டிகள் வாங்கப்பட்டன. இந்த 2 ரெயில் பெட்டிகளிலும் ஒரே நேரத்தில் 72 பேர் வரை பயணிக்க முடியும். இந்த ரெயில் பெட்டிகளை மின்இழுவை ரெயில்நிலையத்தில் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொருத்தும் பணி
இதனையடுத்து கடந்த 27-ந்தேதி மின்இழுவை ரெயில்நிலையத்தில் நவீன ரெயில் பெட்டிகளை பொருத்தும் பணி தொடங்கியது. முன்னதாக புதிய ரெயில் பெட்டிகளுக்காக ரெயில்நிலைய மேடை பகுதி பொக்லைன் கொண்டு இடித்து மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் புதிய ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டது. பின்னர் அவற்றை ரோப் மூலம் இணைத்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இயக்கி சோதனை செய்யும் முயற்சி நடந்து வந்தது.
சோதனை ஓட்டம்
இந்நிலையில் நேற்று பழனி மின்இழுவை ரெயில்நிலையத்தில் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ரெயில் பெட்டிகளில், 5 டன் அளவில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைக்கப்பட்டு ரெயிலை இயக்கி சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது பொறியாளர்கள் குழுவினர் ரெயில் தண்டவாளம், பெட்டிகளின் இயங்கு தன்மை, ரோப் தன்மை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, முதற்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விரைவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப குழு சோதனை செய்ய உள்ளனர். அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியது இருந்தால் மாற்றி அமைக்கப்படும். மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.
--------