ஒன்றியக்குழு தலைவருடன், தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ஒன்றியக்குழு தலைவருடன், தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
தா.பேட்டை:
தா.பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய ஆணையர்கள் ஆர்.மனோகரன், ஆர்.பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அப்போது, தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆணையர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கவுன்சிலர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. பின்னர் ஆதிதிராவிடர் மயானம் சீரமைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர். முன்னதாக வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஒன்றிய செலவினங்கள் தொடர்பாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.