போதைக்கு அடிமையாகாமல்இளைஞர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும்:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்


போதைக்கு அடிமையாகாமல்இளைஞர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும்:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போதைக்கு அடிமையாகாமல் இளைஞர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொண்டு எதிர்காலங்களில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரசாரம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி, கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

போதைபொருள் இல்லாத...

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சார்பில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நேர்மறை சிந்தனை

மேலும் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதால் இளவயதிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொண்டு எதிர்காலங்களில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் முன்பு செல்பி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story