போதிய சுத்திகரிப்பு இல்லாமல்குடிநீர் வினியோகம்


போதிய சுத்திகரிப்பு இல்லாமல்குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 29 July 2023 1:15 AM IST (Updated: 29 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், போதிய சுத்திகரிப்பு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்வதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

திண்டுக்கல்

நகராட்சி கூட்டம்

பழனி நகராட்சி கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் பாலமுருகன், நகர்நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

சுபா (தி.மு.க.): மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், சம்பவத்தை கண்டித்தும் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கந்தசாமி (மா.கம்யூனிஸ்டு): தமிழக மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கவர்னரை திரும்ப பெற கோரியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பச்சை நிறத்தில் குடிநீர்

சாகுல்அமீது (தி.மு.க.): பழனி நகரில் 'ஜிகா' குடிநீர் திட்டம் எந்த அளவில் உள்ளது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. அதேபோல் நகராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் சில நாட்களாக பச்சை நிறத்தில் வருகிறது. எனவே அங்கு போதிய சுத்திகரிப்பு பணிகள் நடைபெறுகிறதா?

உதவி பொறியாளர்: நகருக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கத்தில் உரிய சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. எனினும் நீரின் நிறம் குறித்து உரிய ஆய்வு செய்யப்படும்.

ரூ.8 கோடி வரி பாக்கி

நடராஜன் (அ.தி.மு.க.): பழனியில் இரவு நேரங்களில் பல சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. அதேபோல் பல மின்கம்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.

ஆணையர்: தற்போது நகராட்சிக்கு புதிதாக 500 விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன. எனவே பழுதடைந்த விளக்குகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுரேஷ் (தி.மு.க.) : நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை விரைந்து வசூலிக்க வேண்டும்.

ஆணையர்: நகராட்சியில் சொத்துவரி ரூ.8 கோடி பாக்கி உள்ளது. எனவே வரி பாக்கியை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து குடிநீர், கழிவுநீர் கால்வாய், சுகாதார பணிகள் உள்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story