காத்திருப்பு அறை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அவர்களை எலிகள் கடிப்பதால் காயத்துடன் செல்லும் கொடுமையும் நடந்து வருகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அவர்களை எலிகள் கடிப்பதால் காயத்துடன் செல்லும் கொடுமையும் நடந்து வருகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரி
கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பகுதிகள் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
இந்த ஆஸ்பத்திரியில் பல்வேறு வசதிகள் இருப்பதால் தனியாருக்கு நிகராக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இங்குள்ள ஒருங்கிணைந்த தாய்-சேய் நலவிடுதி மிக சிறப்பாக செயல்பட்டு வருவதால், ஏராளமான கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
இங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளுடன் தலா ஒருவர் தங்க அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் பகலில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் உள்ளே செல்ல முடியும்.
காத்திருப்பு அறை இல்லை
அவர்களுக்கு காத்திருப்பு அறை அமைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் இந்த வளாகத்துக்கு வெளியே உள்ள பகுதியில் சுவர் ஓரங்களில் இரவு நேரத்தில் தங்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இரவு நேரத்தில் கொசுத்தொல்லையால் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் காத்திருப்பு அறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து இங்கு சிகிச்சைக்காக வந்து செல்பவர்கள் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தாய்சேய் விடுதி மிகச்சிறப்பாக செயல்படுகிறது.
ஆனால் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுடன் ஒருவர் தங்கி இருக்க அனுமதி இருந்தாலும் இரவு நேரத்தில் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
இதன் காரணமாக அவர்கள் வெளியேதான் படுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எலி தொல்லை
பெரும்பாலும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் ஏழை-எளிய மக்கள்தான். அவர்கள் ஓய்வெடுக்க காத்திருப்பு அறை இருந்தால் உதவியாக இருக்கும்.
ஆனால் அதுகட்டப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த விடுதியின் அருகிலேயே ஒரு செட்போன்று போடப்பட்டு உள்ளது. அதில்தான் தங்க வேண்டும்.
இந்த ஷெட்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் கூட ஒருவரின் கையை எலி கடித்துவிட்டது. இதனால் அவர் ரத்தக்காயத்துடன் அங்கிருந்து சென்றார்.
இதுதவிர பொதுமக்கள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் துணிகளை எலிகள் கடித்து குதறி வருகிறது.
உடனடி நடவடிக்கை
மேலும் இந்த ஷெட்டில் எவ்வித வசதியும் இல்லை.
ஆனால் இதில்தான் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வருகிறார்கள். இதில் இடம் கிடைக்காதவர்கள் திறந்த வெளியில் இரவில் படுத்து உறங்கும் நிலையும் நிலவி வருகிறது.
இதனால் அவர்கள் படும் துயரம் சொல்லிமுடியாது.
எனவே கர்ப்பிணிகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள் ஓய்வு எடுக்க காத்திருக்கும் அறை வசதி செய்து கொடுத்து, அதில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இருக்க வழிவகை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.