கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு நடந்தது
கேரள மாநிலத்தில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் உடல் பாகங்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
நரபலி
தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பத்மா (வயது 52). இவர் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார். இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பத்மா மற்றும் கேரள மாநிலம் கொச்சி காலடி பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
இதில் தொடர்புடைய மந்திரவாதி ஷாபி, பகவல்சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா ஆகிய 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பத்மாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இறுதிகட்ட விசாரணை மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கு பிறகு பத்மாவின் உடல் பாகங்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே உள்ள எர்ரப்பட்டிக்கு பத்மாவின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது. இறுதிச்சடங்கில் பத்மாவின் உறவினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.