கடலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5½ லட்சம் மோசடி பெண் கைது
கடலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜதுரை மனைவி அல்லி என்கிற தனஞானேஸ்வரி (வயது 35). இவர் புதுப்பாளையம் நபிகள் நாயகம் தெருவில் வசிக்கும் பாஸ்கரன் மனைவி மாலா என்கிற பத்மினியிடம் (55) கடந்த 20.3.2021 முதல் 25.1.2022 வரை தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு என மொத்தம் ரூ.5 லட்சத்து 61 ஆயிரத்து 490 கொடுத்துள்ளார். ஆனால் ஏலச்சீட்டு முடிந்தும், இதுவரை அல்லி கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மாலா மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அல்லி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாலா, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலாவை தேடி வந்தனர். இந்த நிலையில் புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி முன்பு நின்றிருந்த மாலாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.