ரூ.3 கோடி மோசடி வழக்கில் பெண் கைது
கோவை கணபதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை கணபதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவனம்
கோவை கணபதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவரது மனைவி லலிதா (28). இவர்கள்
இருவர் உள்பட மொத்தம் 7 பேர் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினர்.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 17.5 சதவீத வட்டியுடன் 100 நாட்கள் கழித்து ரூ.2 லட்சம் திரும்ப தரப்படும் என்றும், மற்றொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டியுடன் 12 மாதங்கள் கழித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் திருப்பி தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ரூ.3 கோடி மோசடி
இந்த திட்டங்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.3 கோடி பணத்தை அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரின் மனைவி லலிதாவை இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.