காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
கூடலூர்,
மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
வேலைக்கு சென்ற பெண்
மசினகுடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கூடலூரை போல் மசினகுடியிலும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் மனித-வனவிலங்கு மோதல்கள் ஏற்படுகிறது.
இந்தநிலையில் வாழைத்தோட்டம் சடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோங்காளி. இவரது மனைவி மங்கிலி (வயது 30), கூலித்தொழிலாளி. நேற்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து மங்கிலி வேலைக்கு புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், அப்பகுதிக்கு திடீரென காட்டு யானை ஒன்று வந்தது. இதை சற்றும் எதிர்பாராத மங்கிலி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.
காட்டு யானை தாக்கியது
இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி வந்த காட்டு யானை மங்கிலியை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அப்பகுதி மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். பின்னர் காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த மங்கிலியை உறவினர்கள் மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மசினகுடி போலீசார் மற்றும் சிங்காரா வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.