வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை


வீட்டில் தனியாக இருந்த பெண்  அடித்துக்கொலை
x

புளியங்குடியில், வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடியில், வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியாக வசித்த பெண்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி தங்கம் (வயது 54).

நாகராஜன் கோவையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்கிறார். இதனால் அவர் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார்.

இவர்களது மகள் கார்த்திகா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தங்கம் மட்டும் அய்யாபுரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். விவசாயம் உள்ளிட்ட வேலைகளுக்கு கூலித் தொழிலாளியாக தங்கம் சென்று வந்தார்.

அடித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவு தங்கம் வீட்டில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தலையில் ரத்தக்காயத்துடன் தங்கம் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தங்கத்தை கொலை செய்தவர் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story