2½ வயது குழந்தையை தவிக்கவிட்டு பெண் தற்கொலை
கோவையில் முதல் மனைவியுடன் கணவர் வெளியூருக்கு சென்றதால் 2½ வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ரத்தினபுரி
கோவையில் முதல் மனைவியுடன் கணவர் வெளியூருக்கு சென்றதால் 2½ வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வியாபாரி
கோவையை அடுத்த கணபதி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 38), வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரகுபதி கோவையை சேர்ந்த திவ்யபாரதி (31) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யபாரதி தனது குழந்தையுடன் அந்தப்பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வசித்து வருகிறார். ரகுபதி சில நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், சில நாட்கள் திவ்யபாரதி வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார்.
அடிக்கடி தகராறு
ரகுபதிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது திவ்யபாரதிக்கு தெரியும் என்றாலும், அவர் முதல் மனைவி வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரகுபதி தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆந்திராவுக்கு செல்ல முடிவு செய்தார். இதை அறிந்த திவ்யபாரதி முதல் மனைவி குழந்தைகளுடன் ஆந்திரா செல்லக்கூடாது என்றுக்கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இருந்தபோதிலும் அவர் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆந்திரா சென்றார். இதை அறிந்த திவ்யபாரதி, தனது கணவருக்கு தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் நான் வெளியூரில் இருப்பதாக கூறி உள்ளார்.
அதற்கு அவர் உடனே வீடியோ காலில் என்னுடன் பேசுங்கள், இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார். ஆனாலும் ரகுபதி வீடியோ கால் செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திவ்யபாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
ஏற்கனவே தற்கொலை முயற்சி
திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவருடைய மகள் கணவருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில்தான் அவர் ரகுபதியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
ரகுபதிக்கு ஏற்கனவே திருமணமானது தெரியும் என்றாலும், முதல் மனைவி வீட்டுக்கு செல்வதை அவர் விரும்பவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே அவர் ஒருமுறை வீட்டை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
பேசாததால் விரக்தி
ரகுபதி தனது முதல் மனைவியுடன் வெளியூர் செல்லும்போதெல்லாம், திவ்யபாரதி, ரகுபதிக்கு போன் செய்து வீடியோ காலில் பேசும்படி கூறுவதுடன், அப்படி பேசவில்லை என்றால் தற்கொலை செய்வதாக மிரட்டி உள்ளார். அப்போது அவர் உடனே அவ்வாறு வீடியோ காலில் பேசிவிடுவார். இந்த முறை அப்படி பேசவில்லை என்பதால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
---------------
உயிரிழந்தது தெரியாமல் தாயின் உடலில் படுத்த குழந்தை
திவ்யபாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரின் உடலை இறக்கி தரையில் படுக்க வைத்தனர். அப்போது அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த திவ்யபாரதியின் 2½ வயது குழந்தை, உயிரிழந்து சடலமாக கிடந்த திவ்யபாரதியின் உடலில் ஏறி படுத்துக் கொண்டது.
இதை பார்த்ததும் கல் நெஞ்சைக்கூட கரைய வைப்பதுபோன்று இருந்தது. கணவருடன் தகராறு இருந்தாலும் தனது குழந்தைக்காவது திவ்யபாரதி வாழ்ந்து இருக்கலாம் என்று அங்கு கூடி இருந்தவர்கள் பேசிக் கொண்டதை கேட்க முடிந்தது.