விஷம் குடித்து பெண் தற்கொலை
பெற்ற குழந்தையை கணவர் பார்க்க வராததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பேசிய உருக்கமான வீடியோ பதிவு போலீசில் சிக்கியது
பொள்ளாச்சி
பெற்ற குழந்தையை கணவர் பார்க்க வராததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பேசிய உருக்கமான வீடியோ பதிவு போலீசில் சிக்கியது.
பெண் குழந்தை
கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அரசு பஸ் கண்டக்டர். இவருக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மகாலட்சுமி(வயது 39) என்பவருக்கும் கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக்கொண்ட மகாலட்சுமி, ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இதற்கிடையில் கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 6 மாதங்கள் ஆகியும் குழந்தையையும், அவரையும் காண ஆறுமுகம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகாலட்சுமி விஷம் குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார், விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோவை பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது.
நிம்மதி இல்லை
அதில், தான் எது செய்தாலும் கணவர் குற்றம் கண்டுபிடிக்கிறார். எனக்கு நிம்மதியே இல்லை. குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு போ என்று அவர் கூறினார். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று மகாலட்சுமி உருக்கமாக பேசியுள்ளது பதிவாகி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.