கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
மயிலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலம்:
மயிலம் அடுத்த பெரியாண்டப்பட்டு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இ்ன்று காலை அதே பகுதியில் நடந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரலட்சுமி வேலைக்கு சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள மனுகாந்தி என்பவரது விளை நிலத்தில் இருந்த கிணற்றில் வரலட்சுமி குதித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வரலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் குடும்ப தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வரலட்சுமிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவு குறித்து சப்-கலெக்டரின் விசாரணைக்கும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.