இலங்கை அகதி முகாமில் பெண் தற்கொலை
பொள்ளாச்சி அருகே இலங்கை அகதி முகாமில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே இலங்கை அகதி முகாமில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இலங்கை அகதி முகாம்
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிப்பவர் பிரதீபன் (வயது 33), பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்தார். இதையடுத்து கோட்டூர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிரதீபனுக்கு, அதே முகாமில் வசித்து வந்த பவித்ரா (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
பெண் தற்கொலை
இந்த நிலையில், பிரதீபனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பிரதீபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பவித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கணவர் கைது
இந்த சம்பவம் குறித்து அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பவித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், தற்கொலைக்கு துண்டியதாக பிரதீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.