கோவை மேயர் குடும்பத்தினர் மீது பெண் பரபரப்பு புகார்
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், கோவை மாநகராட்சி மேயர் குடும்பத்தினர் மிரட்டுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
கோவை
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், கோவை மாநகராட்சி மேயர் குடும்பத்தினர் மிரட்டுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
பெண் புகார்
கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் வசிப்பவர் சரண்யா கோபிநாத். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த நான் கடந்த 2 ஆண்டுகளாக எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறேன். எனது வீட்டின் அருகில் கோவை மாநகராட்சி யின் மேயர் கல்பனாவின் தம்பி குமார் மற்றும் தாயார் காளியம்மாள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்பனா மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு அவரது தாயார் காளியம்மாள் மருத்துவ செலவிற்கு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினார். இந்த பணத்தை அவரின் தம்பி குமார் பெற்று கொண்டார். அதன்பிறகு அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரத்தை திருப்பி கொடுத்தார். மீதி ரூ.10 ஆயிரத்தை தரவில்லை. அந்த பணத்தை கேட்டபோது குமார் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மிரட்டல்
இந்த நிலையில் நாங்கள் குடியிருந்து வரும் வீட்டின் கதவை அவர்கள் பூட்டினர். மேலும் கெட்டுப்போன உணவுகள், அழுகி போன பழங்கள், பயன்படுத்தப்பட்ட பாக்குமட்டை தட்டுகளை எங்களது வீட்டின் அருகே கொட்டி வைக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் மேயர் குடும்பத்தினர் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களை மிரட்டி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
---------------------
(கட் டி.சி.)
சிலரின் தூண்டுதலின் பேரில்
'என் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி'
சட்டப்படி சந்திப்பேன் என்று மேயர் கல்பனா பேட்டி
எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலரின் தூண்டுதலின் பேரில் என் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. அதை சட்டப்படி சந்திப்பேன் என்றும் மேயர் கல்பனா தெரிவித்தார்.
பொய்யான புகார்
தனது குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா கூறியதாவது:-
நான் கட்சியில் சாதாரண நிலையில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது மேயராக உயர்ந்து உள்ளேன். எனவே எனது வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலின் பேரில் அந்த பெண் என் மீது அவதூறு பரப்பி வருகிறார். இதன் மூலம் என் மீது களங்கம் சுமத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.
அந்த பெண் மீது ஏற்கனவே அந்த பகுதி குடியிருப்பு நிர்வாகிகள் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் மீது இன்று (நேற்று) காலை 10 மணிக்கு விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் பொய்யான புகாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்து உள்ளார்.
சட்டப்படி சந்திப்பேன்
சரண்யா தம்பதியினர் அந்த குடியிருப்பில் உள்ள குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்வார்கள். மேலும் பால்காரர், தனியார் பள்ளியில் வேலைபார்க்கும் நபர், மின்வாரிய ஊழியர் உள்ளிட்டோரிடம் அந்த தம்பதியினர் தகராறு செய்து உள்ளனர். இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பெண் என் மீது திட்டமிட்டு பொய் புகாரை அளித்து வருகிறார். எனவே என் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.