கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன், பெண் தர்ணா
போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன், பெண் தர்ணாவில் ஈடுபட்டார்
போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி மாற்றுத்திறனாளி குழந்தையுடன் பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொலை மிரட்டல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கரைகண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாய்ஸ்மேரி(வயது 45) இவரது கணவர் வேலணிராஜ் இருதயநோயாளி. இவர்களுக்கு ஜன்னி என்ற மாற்றுத்திறனாளி மகளும், ஜெனிஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாய்ஸ்மேரியின் தாய்வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்துவந்துள்ளனர்.
இந்தநிலையில் ஜாய்ஸ்மேரியின் சகோதரர்கள் வீட்டை காலிசெய்து உனது கணவர் ஊரோடு செல் என்று கூறி தரகுறைவாக திட்டி ஜாய்ஸ்மேரி மற்றும் அவரது கணவர் வேலணிராஜ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இது குறித்து கடந்த மாதம் பாலையூர் போலீசில் புகார் அளித்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஜாய்ஸ்மேரி தனது மாற்றுத்திறனாளி குழந்தை, குடும்பத்துடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் கண்மணி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.