காட்டு யானை தாக்கி பெண் பலி
தேவாலாவில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானை தாக்கி பெண் பலியானார். இதனால் யானையை பிடிக்க கோரி உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
தேவாலாவில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானை தாக்கி பெண் பலியானார். இதனால் யானையை பிடிக்க கோரி உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டை உடைத்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 56). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது அண்ணன் ராமலிங்கம் (65) குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாப்பாத்தி மற்றும் அண்ணன் ராமலிங்கம், அவரது மனைவி சுந்தராம்பாள் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இரவு 9.30 மணிக்கு அப்பகுதிக்குள் காட்டு யானைகள் முகாமிட்டன. தொடர்ந்து காட்டு யானை ஒன்று வீட்டை உடைத்தது. இதனால் பாப்பாத்தி வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற போது, காட்டு யானை உடைத்த சுவர் அவர் மீது விழுந்தது. இதில் சிக்கி அலறிய பாப்பாத்தியை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிராம மக்கள் போராட்டம்
மேலும் ராமலிங்கம், சுந்தராம்பாள் வெளியே தப்பி ஓடியதால் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தேவாலா போலீசார், வனத்துறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர்.
அப்போது வீடுகளை தினமும் உடைத்து வரும் அரிசி ராஜா உள்ளிட்ட சில காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற சூழலில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிடிக்க உறுதி
பின்னர் வனத்துறை சார்பில் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து பலியான பாப்பாத்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.