காட்டு யானை தாக்கி பெண் பலி
கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண், காட்டு யானை தாக்கி பலியானார்.
கூடலூர்,
கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண், காட்டு யானை தாக்கி பலியானார்.
காட்டு யானை தாக்கியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா புளியம்பாரா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணி (வயது 58). கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கல்யாணி, 3 பெண்களுடன் அதே பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். அங்கு விறகுகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காட்டு யானை ஓடி வந்தது. இதை கண்ட பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், கல்யாணி யானையிடம் சிக்கிக்கொண்டார்.
காட்டு யானை தாக்கியதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த சக பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கல்யாணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் கூறும் போது, விறகு சேகரிக்க சென்ற பெண்ணை தாக்கிய காட்டு யானை குறித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ள காட்டு யானை தாக்கியதா என தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்கள் தனியாக செல்லக்கூடாது என எச்சரித்து உள்ளனர்.
கடந்த மாதம் 20-ந் தேதி பாப்பாத்தி என்ற பெண்ணை காட்டு யானை தாக்கி கொன்றது. 12 நாட்கள் கழித்து மீண்டும் மற்றொரு பெண்ணை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கல்யாணியுடன் விறகு சேகரிக்க சென்ற சக பெண்கள் கண்ணீர் மல்க கூறும்போது, எந்த ஆதரவும் இல்லாத சூழலில் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் அத்தியாவசிய செலவுகளை கவனிக்க முடியாத நிலை உள்ளது. சமையல் கியாஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பு பயன்படுத்தி வருகிறோம். இதற்காக விறகு சேகரிக்க சென்றபோது அவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்றனர்.