திருவெண்ணெய்நல்லூர் அருகேலாரி மோதி பெண் சாவுபொதுமக்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மோதி பெண் உயிரிழந்தார். விபத்தை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செட்டி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி தெய்வமணி (வயது 50). நேற்று மதியம் இவர் ஆமூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வீரப்பார் கிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதற்காக மணக்குப்பம் வந்த தெய்வமணி, பஸ் ஏறுவதற்காக அங்கு மடப்பட்டு-திருக்கோவிலூர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக பெரியசெவலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே அந்த பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும், இதுவரையில் 14-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, இதை தடுக்க வேகத்தடை மற்றும் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டர்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேகத்தடை, சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.
சாவு
இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தெய்வமணி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.