மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்தார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை காமராஜர் நகரை சேர்ந்த செல்லமுத்துவின் மனைவி சுசீலா(வயது 45). இவர் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டார். பின்னர் மதியம் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதே சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வரும் டெல்லியை சேர்ந்த ஜாவாத் முகமது சுவப்(20), அப்துல் ரஷீத் மகன் பர்மான்(20) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் மதிய உணவு வாங்குவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் தொழுதூர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சுசீலா மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.