விஷம் குடித்து பெண் சாவு
விஷம் குடித்து பெண் சாவு
திருவோணம் அருகே விஷம் குடித்து பெண் பரிதாபமாக இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டுள்ளது.
தகராறு
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வளர்மதி (வயது50). வளர்மதிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்து மனைவி ரோஜாவிற்கு சம்பவத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோஜாவின் கணவர் முத்து வளர்மதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து சாவு
இதில் மனஉளைச்சல் அடைந்த வளர்மதி பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு முத்து வீட்டின் முகப்பில் போய் சாய்ந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வளர்மதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி பரிதாபமாக இறந்தார்.
4 பேர் மீது வழக்கு
இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் வளர்மதியை தற்கொலைக்கு தூண்டியதாக முத்து, அவரது மனைவி ரோஜா, முத்துவின் தந்தை பால்சாமி, தாயார் ஆண்டாள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.