மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலியானார்.
நத்தம் அருகே உள்ள வத்திபட்டியை சேர்ந்தவர் அழகன். அவருடைய மனைவி சின்னக்காந்தி (வயது 52). நேற்று இவர், நத்தத்திற்கு கூலி வேலைக்கு செல்வதற்காக மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அந்த மோட்டார்சைக்கிளை மறித்து, அதில் 'லிப்ட்' கேட்டு சின்னக்காந்தி சென்றார்.
நத்தம் அருகே புதுக்கோட்டை பிரிவு பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க மோட்டர்சைக்கிளை ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டார். இதில் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சின்னக்காந்தி தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னக்காந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 'லிப்ட்' கேட்டு சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.