தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில்மின்சாரம் தாக்கி பெண் சாவுதிருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம்


தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில்மின்சாரம் தாக்கி பெண் சாவுதிருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம்
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மனைவி காத்தாயி (வயது 52). இவர் மாடு வளர்த்து வருகிறார். இவரது மாட்டுக்கு தீவனத்துக்காக புற்கள் அறுக்க அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கரும்பு வயலுக்கு சென்றார்.

அப்போது, வயலில் புற்களை அறுத்துக்கொண்டு இருந்த காத்தாயி, திடீரென எழுந்தார். அப்போது, அந்தவரியாக தாழ்வாக சென்ற மின்கம்பி, காத்தாயி மீது உரசியதாக தெரிகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை, வயல் பகுதியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இறந்த காத்தாயியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தினருக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கூறியும், மின்வாரியத்தை கண்டிததும் கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்த திருவண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், காத்தாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story