மின்சாரம் தாக்கி பெண் சாவு


மின்சாரம் தாக்கி பெண் சாவு
x

நாகர்கோவிலில் மகளுக்கு இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தாயார் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவிலில் மகளுக்கு இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தாயார் பரிதாபமாக இறந்தார்.

மகளுக்கு இன்று திருமணம்

நாகர்கோவில் கீழப்பெருவிளை அய்யா கோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல், பி.எஸ்.என்.எல். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாந்தி (வயது 51). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன் பிரதீஷா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், எள்ளுவிளையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனால் நேற்று சண்முகவேல் வீடே திருமண களை கட்டியிருந்தது. ஏராளமான உறவினர்கள் அங்கு வந்திருந்தனர். எனவே சாந்தி உறவினர்களை கவனித்துக் கொண்டு அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

மின்சாரம் தாக்கி தாய் சாவு

இதற்காக நேற்று பிற்பகல் 3 மணியளவில் சாந்தி கிரைண்டரில் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிா்பாராத விதமாக கிரைண்டரில் மின்கசிவு ஏற்பட்டு சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

மகளுக்கு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென சாந்தி இறந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினர் மட்டுமின்றி ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக மகள் பொன் பிரதீஷா, தாய் சாந்தியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தனக்கு நல்லது நடக்கும் நிலையில் அதை பார்க்க தன் தாயார் இல்லையே என்று கூறி அவர் அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்கும் விதமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிச்சயிக்கப்பட்டபடி திருமணம்

மின்சாரம் தாக்கி சாந்தி இறந்த நிலையில் நிச்சயிக்கப்பட்டபடி திருமணத்தை நடத்த வேண்டும் என்று இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி சாந்தி உடல் பிரேத பரிசோதனை செய்து கிடைத்ததும் உடனடியாக நல்லடக்கம் செய்துவிட்டு குறித்த நேரத்தில் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் பேசி கொண்டனர். இதற்காக முக்கிய நிர்வாகிகள் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்களை தொடர்பு கொண்டு சாந்தி உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து தருமாறு கோாிக்கை வைத்தனர்.

அதன்படி சாந்தி உடலை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் டாக்டர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இரவு 9.30 மணியளவில் சாந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சாந்தி உடலை வாங்கி செல்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான உறவினா்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story