தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் பலி
தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் பலி
கோவை
கோவையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் பலியானார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழில்
கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி (வயது 27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ஒரு சாலை விபத்தில் மூர்த்தி இறந்து விட்டார். இதனால் தேவி அதே பகுதியில் உள்ள தனது சகோதரியான சத்யா (33) என்பவருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் உப்பிலிபாளையம் ஜி.வி. ரெசிடென்சியில் ஒரு நிறுவன சிறப்பு விழாவுக்காக கேட்டரிங் பணிக்கு சென்றனர். பின்னர் அங்கு சேர்ந்த குப்பைகளை அல்லும் பணியில் ஈடுபட்டனர்.
நீரில் மூழ்கி பெண் பலி
அப்போது திடீரென தேவி மாயமானார். இதையடுத்து அவரை அவரது சகோதரி சத்யா பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தரைதளத்தில் 15 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியை பார்த்தபோது அதற்குள் மூழ்கிய நிலையில் தேவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு நிலையத்துக்கும், சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய தேவியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர் ஆனால் அவர் இறந்து விட்டார்.
சிங்காநல்லூர் போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தரையில் பதிக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தேவி எப்படி விழுந்தார்? தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore