வால்பாறையில் கரடி தாக்கி பெண் படுகாயம்


வால்பாறையில் கரடி தாக்கி பெண் படுகாயம்
x
தினத்தந்தி 22 Aug 2023 7:00 PM GMT (Updated: 22 Aug 2023 7:00 PM GMT)

வால்பாறையில் கரடி தாக்கி பெண் படுகாயம்

கோயம்புத்தூர்


வால்பாறை


வால்பாறை அருகில் உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளி கமலம் (வயது 59). இவர் நேற்று காலை 8.15 மணியளவில் 3-வது டிவிசன் பகுதியில் உள்ள 7 ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வனப் பகுதிக்குள் இருந்து ஓடி வந்த கரடி, தொழிலாளி கமலத்தின் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. கமலம் கூச்சலிட்டு கரடியிடமிருந்து தப்பிக்க போராடியுள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டபடி வந்து கரடியை விரட்டினர். இதனைத் தொடர்ந்து கரடி கமலத்தை விட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.


பின்னர் கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் பார்கவே தேஜா, வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் வனத்துறை சார்பில் நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கினர். வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.


நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கே கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதைப் பார்த்து தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.



Next Story