மர்ம பொருள் வெடித்து பெண் படுகாயம்


மர்ம பொருள் வெடித்து பெண் படுகாயம்
x

அரக்கோணம் அருகே மர்மப்பொருள் வெடித்து பெண் படுகாயம் அடைந்தார். அது நாட்டுவெடிகுண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராணிப்பேட்டை

ஆடு மேய்த்தார்

அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மணிமேகலை (வயது 45). இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அங்குள்ள மரத்தில் இருந்து இலைகளை பறித்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த கற்களுக்கு இடையே கால்களை வைத்தபோது நூலால் சுற்றபட்டிருந்த உருண்டையான பொருள் மீது கால் பட்டதாக கூறப்படுகிறது. திடீரென அந்த பொருள் வெடித்து சிதறியது. இதனால் அங்கு புகைமூட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

படுகாயம்

மர்ம பொருள் வெடித்து சிதறியதில் மணிமேகலையின் கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் மணிமேகலையை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடித்த பொருள் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த வெடியா? அல்லது ரவுடிகள் பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டா என்று விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story