மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
பரமத்திவேலூர்
பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 54). இவர் சேளூர் சாணார்பாளையம் பகுதியில் கடந்த 3-ந் தேதி வேலூரில் இருந்து பிலிக்கல்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மல்லிகா உயிருக்கு போராடியுள்ளார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மல்லிகா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகா மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சேளூர் சாணார்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் (65) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.