பாப்பிரெட்டிப்பட்டி அருகே மிளகாய் பொடியை கண்ணில் தூவி பெண்ணிடம் 5 பவுன் நகைபறிப்பு-மர்ம நபர்கள் கைவரிசை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே மிளகாய் பொடியை கண்ணில் தூவி பெண்ணிடம் 5 பவுன் நகைபறிப்பு-மர்ம நபர்கள் கைவரிசை
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மிளகாய் பொடியை கண்ணில் தூவி பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பெண்ணிடம் நகைபறிப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருடைய மனைவி ருக்மணி (வயது 50). சக்திவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ருக்மணி வீட்டின் முன்பு 3 கடைகள் கட்டி உள்ளார். அதில் ஒரு கடையில் மினி ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார். தினந்தோறும் காலை கடையை திறந்து விட்டு, இரவு 10 மணிக்கு கடையை மூடி விட்டு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ரைஸ் மில்லை மூடிவிட்டு வீட்டின் மெயின் கேட்டை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அங்கு போர்டிகோவில் இருந்த மோட்டாரை ஆப் செய்து விட்டு திரும்பினார். அப்போது பின்னால் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ருக்மணியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பிடித்து இழுத்தார். ருக்மணி நகையை இறுக பிடித்தார்.

அப்போது வந்த மற்றொரு நபரும் சேர்ந்து ருக்மணியை போர்டிகோவில் இருந்து வெளியே இழுத்து சென்று, அவர்கள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை ருக்மணியின் கண்ணில் தூவி விட்டு தங்கநகையை பறித்து சென்றனர்.

வலைவீச்சு

இதையடுத்து ருக்மணி திருடன், திருடன் என கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த மகள் மகாலட்சுமி தாயார் ருக்மணியை மீட்டு பொம்மிடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story