நாய் துரத்தியதில் தகராறு:பெண்ணுக்கு கத்திக்குத்துபோலீசார் விசாரணை
பனமரத்துப்பட்டி
பனமரத்துப்பட்டி பேரூராட்சி நல்லியாம்புதூரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). இவருடைய மனைவி ஜெயகாந்தி (40). இருவரும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். ஜெகநாதன் வீட்டின் அருகிலேயே அவரது உறவினர் கந்தசாமி என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இரு குடும்பத்தினர் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கந்தசாமியின் மகன் பிரசாந்த் (25), தனது மோட்டார் சைக்கிளில் ஜெகநாதன் வீட்டின் வழியே சென்றுள்ளார். அப்போது ஜெகநாதன் வளர்த்து வரும் நாய் பிரசாந்தை கடிப்பதற்காக துரத்தி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், ஜெகநாதன், அவரது மனைவி ஜெயகாந்தி ஆகியோரிடம் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் பிரசாந்த் அங்கிருந்த கத்தியை எடுத்து ஜெயகாந்தியின் மார்பில் குத்தி உள்ளார். இதில் ஜெயகாந்தி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதைக்கண்ட ஜெகநாதன், பிரசாந்தை தாக்கி உள்ளார். இதில் பிரசாந்த் காயம் அடைந்தார். இவர்களது சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஜெயகாந்தியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரசாந்தும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.