நடுரோட்டில் பெண்ணுக்கு கத்திக்குத்து
சரவணம்பட்டியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
பணம் கொடுக்கல், வாங்கல்
கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி.நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா (வயது 29), கோவை-சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகரின் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
எல்.ஜி.பி.நகருக்கு மீன் வியாபாரத்திற்கு வரும் ஜெயக்குமாருக்கும், தீபிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. அப்போது, ஜெயக்குமாரிடம் இருந்து தீபிகா தனது தேவைக்காக, ரூ.40 ஆயிரம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கொடுத்த பணத்தை ஜெயக்குமார் கேட்டுள்ளார். ஆனால் தீபிகா கொடுக்கவில்லை.
பெண்ணுக்கு கத்திக்குத்து
நேற்று முன்தினம் தீபிகா தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது நடுவழியில் அவரை வழிமறித்த ஜெயக்குமார், கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மீன் வெட்டும் கத்தியால் தீபிகாவை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் அவருக்கு கழுத்து, மார்பு, கை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீன் வியாபாரி கைது
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கத்தியால் குத்திய ஜெயக்குமாரை கைது செய்தனர்.