பெண்ணை கழுத்தை இறுக்கிக் கொன்று 16 பவுன் நகை கொள்ளை
ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை கழுத்தை இறுக்கிக் கொன்று 16 பவுன் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை கழுத்தை இறுக்கிக் கொன்று 16 பவுன் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பெண்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி இந்திராணி (வயது 48). இவர்களது மகன் பேச்சியப்பன் (24).
நேற்று முன்தினம் இந்திராணி தனது மகனுடன் மதுரையில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, கோவில்பட்டிக்கு திரும்பினார். அங்கிருந்து பேச்சியப்பன் தனது தாயாரை மேலமுடிமண் கிராமத்திற்கு பஸ் ஏற்றிவிட்டார்.
வீடு திறக்கவில்லை
இந்த நிலையில் கீழமுடிமண் கிராமத்தில் இறந்த மற்றொரு உறவினரின் வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இந்திராணி கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவரை அழைத்து வர அதே கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் சிலர் மேலமுடிமண் கிராமத்தில் உள்ள இந்திராணி வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. ஆனால் உள்ளே மின்விசிறி ஓடும் சத்தம் கேட்டது.
பிணமாக கிடந்தார்
இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஷ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, அங்கு இந்திராணி பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கழுத்தை இறுக்கி கொலை
மேலும் இந்திராணி கழுத்தில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், வீட்டில் இந்திராணி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே புகுந்தனர். இதை பார்த்த இந்திராணி அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவரிடம் மர்மநபர்கள் நகை பறிக்க முயன்றனர். அதில் ஏற்பட்ட தகராறில் இந்திராணியின் கழுத்தை இறுக்கி கொலை ெசய்தனர். பின்னர் அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.