கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

30 பவுன் நகையை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே ராமையன்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி வசந்தா (வயது 54). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். அவர் அங்குள்ள நுழைவுவாயில் அருகில் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று வசந்தாவை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பினனர் அவரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வசந்தா கூறுகையில், நான் கடந்த 2017-ல் வளவனூரில் உள்ள ஒரு நகை அடகு கடையில் என்னுடைய 30 பவுன் நகையை அடகு வைத்தேன். அதற்குரிய பணத்தை நான் சிறிது, சிறிதாக செலுத்திவிட்டேன். பணம் முழுவதையும் செலுத்திய பிறகு என்னுடைய நகையை தரும்படி கேட்டதற்கு அடகு கடைக்காரர், என்னுடைய நகையை கொடுக்க மறுக்கிறார். இதுபற்றி வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அடகு கடைக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய நகையை மீட்டுத்தர வேண்டும் என்று முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story