குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு
திருப்பத்தூரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பச்சிளம் குழந்தையுடன் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அறுவை சிகிச்சை
திருப்பத்தூர் அருகே உள்ள சிங்கபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 31), லாரி டிரைவர். இவரது மனைவி கோமதி (25). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோமதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கனாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது தாயும், சேயும் நலமாக இருந்தனர்.
அதைத்தொடர்ந்து கோமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து காக்கனாம்பாளையத்தில் இருந்து ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நேற்று கோமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திடீர் சாவு
அறுவை சிகிச்சை முடிந்த சற்று நேரத்தில் கோமதிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கோமதியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர்.
அப்போது கோமதியின் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாததால், உடனே திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தபோது, கோமதி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கோமதியின் உறவினர்கள் கோமதியின் பச்சிளம் குழந்தையுடன் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டும், கோமதி சாவுக்கு காரணமான டாக்டரை கைது செய்யக்கோரியும், அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, கோமதியின் உறவினர்கள், டாக்டர்களின் ஆலோசனைப்படி தான் ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோமதிக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை செய்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் கூறினர். உடனே டாக்டர்கள் அறிவுரைப்படி கோமதியை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாரானோம்.
வாக்குவாதம்
ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்தது. இந்த தாமதத்தினாலும், டாக்டர்களின் தவறான அறுவை சிகிச்சையாலும்தான் கோமதி உயிரிழந்தார். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் இங்கு வரவேண்டும் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து கோமதி உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும், அங்கு கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து கோமதியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து கோமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.