ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் மர்ம சாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாமல் தவிக்கும் கணவன் அதிகாரியிடம் மீண்டும் மனு


ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் மர்ம சாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாமல் தவிக்கும் கணவன் அதிகாரியிடம் மீண்டும் மனு
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாமல் தவிக்கும் கணவன் அதிகாரியிடம் மீண்டும் மனு அளித்தார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் மேலக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பூவராகமூர்த்தி (வயது 61). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமாவதி (43). இவர்களுக்கு கிருஷ்ணகுமார் (21) என்ற மகன் உள்ளார்.

பிரேமாவதி கடந்த ஜனவரி மாதம் ஓமன் நாட்டிற்கு, வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 1-ந் தேதி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக பூவராக மூர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. அவரது இறப்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், உரிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பிரேமாவதியின் உடலை பிரேத பரிசோதனை செய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விருத்தாசலம் சப்லெக்டர், கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து இருந்தார். ஆனால், இதுவரைக்கம், பிரேமாவதியின் உடல், அவருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் 40 நாட்களுக்கு மேலாக மனைவியின் உடல் கிடைக்காமல் பூவராக மூர்த்தி மேலும் சோகத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இந்நிலையில் அவர் நேற்று மீண்டும் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமாரை சந்தித்து மனு அளித்தார். அதில், தனது மனைவி தற்கொலை கொண்டு இருக்க மாட்டார். அவரது சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட நேர்முக உதவியாளர் செந்தில்குமார், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story