குழந்தைகளுடன் பெண் திடீர் மறியல்


குழந்தைகளுடன் பெண் திடீர் மறியல்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:30 AM IST (Updated: 17 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் குறைகள் தொடர்பான கோரிக்கைகளை கலெக்டரிடம் அளித்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்த தவுலத் (வயது 32) என்பவர் மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தார். இவர் திடீரென தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பெண்ணை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து மனு

பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து தவுலத் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் வயிற்றில் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறேன். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசன்பாளையத்தில் எனது குடும்பத்தினருக்கு சொந்தமான 8½ ஏக்கர் நிலம் உள்ளது. இதை எனக்கு தெரியாமல் விற்று விட்டனர். ஆனால் அதில் எனக்கு வரவேண்டிய பங்கும் தரவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும்.

மேலும் எனது பெண் குழந்தைக்கு தற்போது 11 வயது ஆகிறது. அவர் 6 வயதாக இருக்கும்போது போடப்பட்ட தடுப்பூசியால் அவர் கால்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதற்கும் அரசு உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி மனு அளிக்க அந்த பெண்ணை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

கலெக்டர் அலுவலகம் எதிரே குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story