பெண்ணின் 98 பவுன் நகைகளை ஒப்படைக்க மறுப்பு: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு


பெண்ணின் 98 பவுன் நகைகளை ஒப்படைக்க மறுப்பு:  கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Aug 2022 1:16 PM GMT (Updated: 19 Aug 2022 2:56 PM GMT)

பெரியகுளத்தில் 98 பவுன் நகைகளை பெண்ணிடம் ஒப்படைக்க மறுத்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

தேனி

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் ஹசீனா (வயது 30). இவருக்கும், கோவை போத்தனூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜமால்முகமது மகன் சையது இப்ராகிம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது சையது இப்ராகிம் சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹசீனா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "திருமணத்தின் போது, எனது பெற்றோர் வரதட்சணையாக 101 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொடுத்தனர்.

இந்நிலையில் எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எனது தாய் இறந்து விட்டதால் நான் பெரியகுளத்துக்கு வந்தேன். இந்நிலையில் எனது நகைகளை தரமாட்டோம் என்று மிரட்டியதோடு, குடும்பம் நடத்தவும் அழைத்து செல்லவில்லை. சுமார் 98 பவுன் நகைகளை தேனியில் உள்ள வங்கி லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை போடியை சேர்ந்த சிலரிடம் கொடுத்து விட்டனர்.

குடும்பம் நடத்த அழைத்துச் செல்லும் போது நகைகளை கொடுப்பதாக எனது கணவர் தரப்பினர் கூறினர். ஆனால் அழைத்துச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ஹசீனாவின் கணவர் சையது இப்ராகிம், மாமியார் அவ்வாம்மாள் உள்பட 7 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story