கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x

கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டான மங்களமேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பெண்கள் அந்த வார்டு உறுப்பினர் அன்புமணி தலைமையில் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு வீடுகள் தோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

குடிநீர் வினியோகிக்க கோரி...

குழாயில் போதிய அளவு குடிநீர் வராததால் குழி தோண்டி பிடித்து வந்தோம். இதனால் தொற்று நோய் பரவுகிறது என்று கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழிகள் மூடப்பட்டு குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தெருவில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பொது குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தினமும் அவ்வளவு தூரம் சென்று குடிநீர் பிடித்து வர முடியவில்லை. முதியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே இருந்ததுபோல் வீடுகள் தோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகிக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் வீடுகள் தோறும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை தொடர்பாக மனுவினை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் தலைவர்களில் சிலர் சேர்ந்து வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சு.ஆடுதுறை ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேசை கொலை வெறியுடன் அடித்து கீழே தள்ளி, சாதி பெயரை சொல்லி திட்டிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கீதாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு சர்க்கரை ஆலை மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனது சொந்த நிலத்திற்கு செல்ல விடாமல் பாதையில் காரை நிறுத்தி தகராறு செய்பவர் மீது நடவடிக்கை எடுத்து, பாதை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

கள் விற்க அனுமதி

பழங்குடியின நரிக்குறவர் முன்னேற்ற சங்கத்தின் துணைத் தலைவர் சரத்குமார் தலைமையில் பழங்குடியின நரிக்குறவர் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே.வாசன் ஆலத்தூர் தாலுகா, காரை மலையப்ப நகரில் வசிக்கும் பழங்குடியின நரிக்குறவர் மக்கள் மற்றும் ராமலிங்க நகரில் வசிக்கும் கலை கூத்தாடி மக்கள் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்ததை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழக அரசு தென்னை-பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலையை அனைத்து வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும், தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவினை முதல்-அமைச்சருக்கு அனுப்பி மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கிராம சபை கூட்டங்கள்

குன்னம் தாலுகா, பீல்வாடி கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பீல்வாடியில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அந்த ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்த ராகவன் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 327 மனுக்கள் பெறப்பட்டன. 3 சக்கர சைக்கிள் கேட்டு கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 10 நிமிடத்திலேயே 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.


Next Story