கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

ஒரே கிராமத்தில் 350 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்காததால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். மேல்முறையீடு செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டு தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த திட்டத்திற்கு தகுதி இருந்தும் பல குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் சின்னசேலம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் 450 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 100 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 350 பேர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தாலுகா அலுவலகத்துக்கு சென்று பெண்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
கணினியில் பதிவாகவில்லை
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மகளிர் உரிமைத்தொகை கேட்டு மேல் முறையீட்டு மனு கொடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்றனர்.
அதன்படி அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவு செய்திருந்த ரசீசை காண்பித்தனர். அதை ஆய்வு செய்த அதிகாரிகள், உங்கள் விண்ணப்பம் கணினியில பதிவாகவில்லை. நாங்கள் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்று கூறினர்.
முற்றுகை-புகார்
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மகளிர் உரிமைத் தொகை கேட்டு கோஷமிட்டனர். இது குறித்து பெண்கள் கூறுகையில், எங்களது கிராமத்தில் ஒரே நாளில் நடந்த முகாமில்தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தோம். அதற்கான ரசீதும் கொடுத்தார்கள். இதில் 100 பேருக்கு மட்டும்தான் பணம் வந்திருக்கிறது. மீதமுள்ள 350 பேருக்கு வரவில்லை. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால் உங்களது விண்ணப்பம் கணினியில் பதிவாகவில்லை என்றும், அங்கு செல், இங்கு செல் என்று அலைக்கழிக்கிறார்கள். மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு கூறுகிறது. ஆனால் கணினியில் மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறைகள் இல்லை. இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களை மீண்டும் அலைக்கழிக்காமல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






